டெல்லியின் சீமாபுரி பகுதியில், ஒரு பெண்ணின் பையை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பட்டப்பகலில் சீமாபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்தது.

தகவல் கிடைத்தவுடன் சாலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த கொள்ளையர்களை தடுக்க முயன்றனர். ஆனால் குற்றவாளிகள் போலீசாரை எதிர்த்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சூழ்நிலையிலும், போலீசார் தைரியத்தை இழக்காமல் பொதுமக்களின் உதவியுடன் இருவரையும் துரத்தி பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், நந்த் நக்ரியைச் சேர்ந்த இம்ரான் (27) மற்றும் காஜியாபாத் அம்ரோலா கிராமத்தைச் சேர்ந்த வாரிஸ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் சம்பவத்தில் பயன்படுத்திய கருப்பு நிற யமஹா மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மே 12 ஆம் தேதி இரவு 7:20 மணியளவில் PCR மூலம் வந்த இரண்டு அவசர அழைப்புகளின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். சேத்தக் சந்தை மற்றும் சிந்தாமணி சவுக் பகுதியில் நடந்த இரண்டு திருட்டு சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.