ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டம் கலிஞ்சாரா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் நடந்த கொடூர சம்பவம், அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவரை, அவரது முன்னாள் காதலர் பேருந்து நிலையத்தில் வைத்து வாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் அர்துனாவைச் சேர்ந்த லீலா தபியர் (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சஜ்ஜன்கர் தொகுதிக்குட்பட்ட சாயா மஹுதி என்ற பகுதியில் உள்ள அரசு சீனியர் செகண்டரி பள்ளியில் சமஸ்கிருத இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று காலை 10.30 மணியளவில், கலிஞ்சாரா பேருந்து நிலையத்தில் லீலா தபியர் பேருந்துக்காக காத்திருந்த போது, மஹிபால் பகோரா என்பவர் ஆல்டோ காரில் அங்கு வந்தார். எந்தவித வாக்குவாதமுமின்றி அவர், திடீரென வாளால் லீலாவின் வயிற்றில்  சரமாரியாக குத்தினார்.

தாக்குதலுக்குப் பிறகு, பயந்த நிலையில் தப்பிச் செல்ல முயன்ற மஹிபால், நெருங்கிய மரத்தில் காரை மோதி விட்டுவிட்டு அங்கிருந்து நடந்து தப்பியோடியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தைக் கண்டு அதிர்ந்த வழிப்போக்கர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கினர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த ஆசிரியைவை ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்தவர்கள் அவரை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளதால், அதனை கைப்பற்றி பன்ஸ்வாரா போலீசார் விசாரணையில் பயன்படுத்தி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்தே குற்றவாளியின் கார் எண் மற்றும் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக எஸ்.பி. ஹர்ஷ்வர்தன் அகர்வால் தெரிவித்தார். தற்போதைக்கு காரை பறிமுதல் செய்துள்ள போலீசார், மகிபால் பகோராவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த பிறகு, லீலா தபியரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் அரசுப் பணியில் இருந்த ஆசிரியையின் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல், பெண்களின் பாதுகாப்பு குறித்து மேலும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும் போலீசார் விரைவில் குற்றவாளியை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.