ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சாலை பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் சஞ்சீவ் குமார் ஷா அல்லது குட்டு சஹா, முகமூடி அணிந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்தின்போது கடையில் தனியாக இருந்த சஞ்சீவிடம் குற்றவாளிகள் முதலில் பெயர் கேட்டுள்ளனர். அவர் பதிலளித்தவுடன், நேராக மார்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

உடனடியாக காயமடைந்த சஞ்சீவைச் சுற்றியிருந்தவர்கள் சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த கொலை சம்பவம் சாஹிப்கஞ்ச் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு, அதே பகுதியில் இருந்த பல கடைகள் தன்னிச்சையாக மூடப்பட்டன. பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

 

இந்நிலையில், காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. நகர காவல் நிலைய பொறுப்பாளர் அமித் குமார் குப்தா, ஜிராவாடி காவல் நிலைய பொறுப்பாளர் சஷி சிங் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி, குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், சஞ்சீவ் குடும்பத்தில் மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.