புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மாணவி சம்பவ நாளில் கல்லூரிக்கு செல்வதற்காக தன்னுடைய ஊர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த மாணவி அரசு பள்ளி அருகே  நடந்த சென்று கொண்டிருந்த போது வாலிபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த வாலிபர்கள் மாணவியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கத்தி கூச்சலிட்ட நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவர்களை மயிலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்தது ஞானமூர்த்தி (22), யுவராஜ் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் மது போதையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்த நிலையில் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.