திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அங்குள்ள மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து இங்குள்ள பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வெளிப்பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ மாணவிகள் சென்று வந்துள்ளனர்.

இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் பெற்றோர்களும் கண்டித்து வந்துள்ளனர். அதோடு இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை திடீரென திரண்ட கிராம மக்கள் பேருந்து வரும்போது அதனை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று கடந்த 4 ம் தேதி முக்கூடல் , பாரதி நகர் , குமாரசாமிபுரம் மற்றும் பனையாங்குறிச்சி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பேருந்து வசதி வேண்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தார். அதே சமயம் அந்த பேருந்து பனையங்குறிச்சி பகுதிக்கு மட்டுமே வந்து செல்வதால் குமாரசாமிபுரம்,பாரதி நகர் ஆகிய பகுதிகளுக்கும் வர வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள், பள்ளி மாணவ மாணவிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அவர்கள் திடீரென பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.