சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை பாக்ஸர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தனியார் பெட்ரோல் பங்கிற்கு வந்த வாலிபர் ஒருவர் வரிசையில் நிற்காமல் ஊழியருக்கு அருகே வந்து பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார். அப்போது ஊழியர் வரிசையில் வந்தால் தான் பெட்ரோல் தர முடியும் என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த அந்த வாலிபர் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் அந்த வாலிபரை தடுக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களையும் வாலிபர் தாக்க முயன்றதாக தெரிகிறது. சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த வாலிபர் மற்றொரு பெட்ரோல் பங்க் ஊழியரையும் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடத்தியவர் நீலாங்கரை சேர்ந்த ராகுல் என்பது தெரியவந்தது. பாக்ஸிங் பயிற்சி முடித்துவிட்டு வரும் வழியில் ராகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியரை தாக்கியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.