நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலபிரபு(28)- கவுரி(26) தம்பதியினர். இவர்களுக்கு கவிதா என்ற இரண்டு வயது மகள் உள்ளார்.  சித்த மருத்துவரான கவுரி சென்னையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். கவுரியின் தந்தை கந்தசாமி(50). இவர்கள் அனைவரும்  குடும்பமாக சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு பாலபிரபு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். வருகிற ஜூன் 2-ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் நேற்று இரவு பாலபிரபு தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை பால பிரபு ஓட்டி வந்துள்ளார்.

அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகே கார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதனால் காரின் முன் பக்கம் முழுவதும் நொறுங்கி பாலபிரபுவும், அவரது மாமனார் கந்தசாமியும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கவுரியும், குழந்தையும் படுகாயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை கவிகா உயிரிழந்தது.

கவுரி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று  வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த பாலபிரபு மற்றும் கந்தசாமி இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.