
நேபாளத்தில் கடந்த வாரம் பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு நேபாளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தப்லேஜங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இடிப்பாடுகளில் இரண்டு வீடுகள் புதைந்தன. இதில் ஒரு வீட்டில் இருந்த கணவன் மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த குடும்பத்தினரின் சுமார் 50 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழிகள் நிலச்சரிவில் சிக்கி இறந்துவிட்டன. மற்றொரு வீட்டில் இறந்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர்களைத் தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் ஒவ்வொரு வருடமும் பருவ மழை காலத்தில் தொடர் மழையால் பேரழிவுகள் ஏற்படும் நிலையில் இந்த வருடம் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.