நெல்கொள்முதல் விதிமுறைகளில் உரிய தளர்வு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளிலுள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடுதல், விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்குதல் போன்று தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல நடவடிக்கைகளால் நெல் சாகுபடிப் பரப்பு அதிகரித்து, குறுவை பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அதோடு மாநிலத்தில் 16.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சம்பா/ நவரை பயிரின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீகிதத்தில் இருந்து 5% வரை தளர்த்தவும், சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீகிதத்தில் இருந்து 7% வரை  தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் அவர்களை  கேட்டுக்கொண்டுள்ளார்.