நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும் நெல்லையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதேசமயம் பாதிப்புகள் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களை முடிவெடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தகத்தை இழந்த மாணவர்களுக்கு விரைவில் புத்தகம் வழங்கப்படும் எனவும். அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் புத்தகத்தை இழந்த மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தால் விரைவில் புத்தகம் வழங்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பெருமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் உடைந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் படியாத சூழல் நிலவுகிறது. வெள்ள நீர் வடிய எப்படியும் 3 நாட்களுக்கு மேல் ஆகும் என தெரிகிறது. மேலும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளையும் 5வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.