
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை விஜயஅச்சம்பாடு மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவரது தம்பி கனகராஜ். இந்நிலையில் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (50) என்பவரிடம் ரூபாய் 300 கடனாக வாங்கியுள்ளார்.
ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த மே 8ஆம் தேதி சுரேஷ்குமார் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவரது தம்பி வாங்கிய பணத்தை சுந்தர் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு சுரேஷ்குமார் பிறகு தருகிறேன் என பதில் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுந்தர், சுரேஷ்குமாரையும், அவரது தம்பியையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த அரிவாளால் சுரேஷ்குமாரை தாக்கி விட்டு மிரட்டி விட்டு சென்றுள்ளார்.
அதன் பின் சுரேஷ் குமார் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சுரேஷ்குமார் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அந்த விசாரணையில் சுந்தர், தம்பி வாங்கிய கடனுக்காக அண்ணனை அரிவாளால் தாக்கியது தெரியவந்தது.
இதனை அடுத்து நேற்று சுந்தர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.