திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை உற்சாகமாக இழுத்தனர். நேற்று காலை தேரோட்டம் தொடங்கிய நிலையில் திடீரென தேர்வடம் அறுந்து விழுந்தது. ராட்சச கயிறுகளால் அமைக்கப்பட்டிருந்த மூன்று வடம் அறுந்து விழுந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாற்று வடம் கொண்டுவரப்பட்டு தேர் இழுக்கப்பட்ட நிலையில் மீண்டும் வடம் அறுந்து விழுந்தது.

இதனால் மீண்டும்வடம் மாற்றப்பட்ட நிலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் தேர் வந்து கொண்டிருந்தது. அப்போது 3-வது முறையாக மீண்டும் தேர்வடம் அறுந்து விழுந்தது. இதேபோன்று சுமார் 5 முறை வடம் அறுந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரும்புச் சங்கிலி மூலம் பின்னர் தேர் இழுக்கப்பட்டது. இதுவரை 517 முறை தேர்த்திருவிழா நடைபெற்றுள்ள நிலையில் ஒரு தடவை கூட இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தேர் வடம் அறுந்து விழுந்ததற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பக்தர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து இழுத்ததால்தான் வடம் அறுந்து விழுந்தது. தேர் வடத்தில் நெம்புகோல் கொடுப்பதற்கு முன்பாகவே பக்தர்கள் இழுத்து விட்டனர். நெல்லையப்பர் கோவில் தேர் 450 டன் இருக்கும் நிலையில் அதற்கான வடத்தை கயிறால் மட்டுமே அமைக்க முடியும் என்று கூறினார். மேலும் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் கவனக்குறைவினால் தான் தேர்வடம் அறுந்து விழுந்ததாக சர்ச்சைகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.