
ஒரு காலத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்தது அதிமுக. இப்போது துண்டு துண்டாக சிதறி பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணி, மறுபக்கம் சசிகலா அணி, தினகரன் அணி வேறு பக்கம் என அதிமுகவில் பல அணிகள் பிரிந்து கிடக்கிறது. இந்த ஒட்டுமொத்த அணிகளுமே தற்போது அதிமுகவை கையில் வைத்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நிற்கிறார்கள். இது எதற்கும் செவி சாய்க்காமல் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை வழிநடத்திவரும் நிலையில் இப்போது அவரது அணிக்கு உள்ளேயே புகைச்சல் உருவாகியுள்ளது. இது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .
முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளது தான் தற்போது ஹாட் டாபிக். அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் தான் அந்த நிகழ்ச்சி புறக்கணித்தேன் என்றும் கூறி இருந்தார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகள் வரிசை கட்டி நிற்கும் பட்டியலில் தற்போது செங்கோட்டையன் சேர்ந்துள்ளது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்பியதன் பின்னணியில் சசிகலா இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் சசிகலா மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் அதிக விசுவாசம் கொண்டவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் இணைந்ததற்கு முக்கிய காரணம் சசிகலா தான். எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருந்த சசிகலா தற்போது செங்கோட்டையனை வைத்து புதிய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.