உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்‌கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹர்திதாலி என்ற கிராமத்தில் வீட்டு நிலத்தடியில் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் சுருண்டு கிடக்கும் அதிர்ச்சிக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. Bharat Samachar என்ற ஊடக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், இருண்ட மற்றும் ஈரப்பதமுள்ள ஒரு இடத்தில் பாம்புகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு மெதுவாக நகரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த நிகழ்வால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்தில் சிக்கினர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கும் வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

வீடியோவில் பாம்புகள் குழுவாக கூடியிருக்கும் காட்சி நெஞ்சை அதிர வைத்தது. அந்த வீட்டு நிலத்தடியில் வேரும், ஈரமும் நிறைந்த இருண்ட பகுதியில்தான் இந்த பாம்பு கூட்டம் இருந்தது. பொதுவாக பாம்புகள் தனியாக நடமாடும் உயிரினங்கள் என்பதால், இப்படியாக பத்து பாம்புகள் மேல் கீழாக சுருண்டு கூடியிருப்பது மிக அரிதானதொரு காட்சி என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் பாம்பு இருப்பு அதிகரித்து வருவதை குறிக்கும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.