கேரளாவின் எட்டுமனூரில், தனது இரு பிள்ளைகளுடன் நதியில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஜிஸ்மோல் சம்பவம், மாநிலத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி ஜிஸ்மோலின் சகோதரர் ஜீது தோமஸ் கூறுகையில், திருமணத்திற்குப்பின் மாமியாரின் வீட்டில் இருந்து ஜிஸ்மோல் பணம் மற்றும் தன் நிறம் தொடர்பாக கடுமையான மனவேதனையை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜிஸ்மோலின் தந்தை மற்றும் சகோதரர் எட்டுமனூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அவரின் மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஜிஸ்மோலுடன் தொலைபேசியில் தொடர்பு கிடைக்காமல் போயிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜிஸ்மோலின் கணவரான ஜிம்மி, ஜிஸ்மோலின் செல்போனை கைப்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. “நாங்கள் பலமுறை ஜிஸ்மோலை ஜிம்மியின் வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல முயன்றோம்,” என ஜீது கூறியுள்ளார். தற்போது ஜிஸ்மோலும், அவரது இரு பிள்ளைகளும் பாலா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் பிணவறையில்வைக்கப்பட்டுள்ளனர். இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து குடும்பத்தினர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

ஜிஸ்மோலின் இறுதிச் சடங்கு கணவரின் ஆலயத்தில் தான் நடைபெறவேண்டும் என்பது க்னானாயா சபையின் விதியாகும். ஆனால், ஜிஸ்மோலின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆலய நிலைமையும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆரம்ப உடலாய்வு தகவலின்படி, மூவரது மரணமும் நுரையீரல்களில் தண்ணீர் தேங்கியதாலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஸ்மோலின் கையில் இரத்த நாளம் வெட்டப்பட்டது, உடலிலும் காயம் இருந்தது, மேலும் குழந்தைகளின் உடலில் விஷம்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், ஜிஸ்மோல் தற்கொலை செய்யும் முன் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.