உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் தாகுர்த்வாரா பகுதியில், குடும்ப தகராறால் ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. அதாவது பிரசாந்த் என்பவர், தனது மனைவி நேஹா  வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து, சமையலறை கத்தியால் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை பிற்பகலில் நடந்தது.

மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த பின்பு, பிரசாந்த் உடலருகே இரத்தத்தோடு உட்கார்ந்தபடியே, கத்தியை கையில் பிடித்தபடி இருந்தார். இதை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “நீ வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று திருமண நாளிலேயே சொன்னேன். ஒரு நாள் ஏமாற்றுவாய் என்று நினைத்தேன். நீ எனக்கு  இல்லையென்றால் வேறு யாருடையவளாகவும் இருக்கக் கூடாது” என அவர் கூறியதைக் காணலாம்.

தகவல் கிடைத்த உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசாந்தை கைது செய்தனர். நேஹாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே நம்பிக்கைக் குறைபாடு மற்றும் சண்டைகள் தொடர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பாக்பத் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.