நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஐரோப்பிய நாடுகளில் வளரும் மரங்கள், மூலிகைச் செடிகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டது. இந்த பூங்கா கடந்த 1867-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது வரை மரங்களும், மூலிகை செடிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பழமை வாய்ந்த மரம் மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மரம் அல்லது மூலிகைச் செடியின் தகவல்களை சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குனர் பாலசந்தர் கூறியதாவது, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பராமரிப்பு நிதியிலிருந்து 2 1/4 லட்சம் செலவில் ஆயிரம் மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளின் பெயர்கள், பூர்வீகம், பலன்கள் உள்ளிட்ட தகவல்கள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளலாம். முதற்கட்டமாக 100 மரங்களுக்கு கியூ ஆர் கோடு பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஆயிரம் மரங்களுக்கு பொறுத்த திட்டமிட்டுள்ளோம். பூங்காவில் இருக்கும் ஜப்பான் ரோஸ் என்ற கமாலியா, டிராகன் ட்ரீஸ் என்ற முட்டைக்கோஸ் மரம், மங்கி பசில் ட்ரீ என்ற குரங்கேரா மரம், ருத்ராட்சை மரங்களில் தற்போது கியூ ஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது. தற்போது முதல்முறையாக நீலகிரி ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. நீலகிரியில் இருக்கும் மற்ற பூங்காக்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமில்லாமல் தாவரவியல் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.