
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதியன்று நடந்தது. நாடு முழுவதும் நடந்த தேர்வில் சுமார் 23 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதேபோல பல மாநிலங்களிலும் ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக அந்தந்த மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளில் சிபிஐ ஏற்கனவே 9 பேரை கைது செய்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் இரண்டு பேரை நேற்று கைது செய்தனர். அதன்படி நாலந்தாவை சேர்ந்த நீட் தேர்வு மாணவரான சன்னி மற்றும் காயாவை சேர்ந்த மற்றொரு மாணவரான ரஞ்சித் குமார் என்பவரின் தந்தை ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.