நாட்டின் 78 வது சுதந்திர தின விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நீண்ட நேரம் உரையாற்றினார். அவர் பேசும்போது எங்களுடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த கோபம் கொண்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு விரைவில் தண்டனை வழங்கி சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வக்கிரமான கொடுமைகள் நடக்கும் போது ஊடகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதே நேரத்தில் இப்படிப்பட்ட கொடூரர்களுக்கு தண்டனை கிடைத்தால் அவைகள் பரபரப்பாக பேசப்படுவது கிடையாது. குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்து பேச வேண்டும். இந்த பயத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று கூறினார். இந்த பேச்சை தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது தன்னுடைய x பக்கத்தில் பிரகாஷ் ராஜ் மோடியின் உரையை பகிர்ந்து உள்ளார். அதோடு மணிப்பூர் முதல் கன்னியாகுமரி வரை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு விடுதலையாகி வெளியே உள்ள குற்றவாளிகள் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். எப்போது நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவருடைய பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்