சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ரசிகர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்போது வரை சினிமா துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் ஆரம்ப கால கட்டத்தில் பல தடைகளையும் தோல்விகளையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைதள பக்கத்தில் வாழ்த்துக்கு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புமிக்க நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க நடை, உடை, பாவனைகளாலும், நேர்த்தியான உடல்மொழியாலும் மக்கள் மனதை வென்று, இந்தியத் திரையுலகை தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த திரை ஆளுமை.

திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்துத் தகர்த்து, தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்தி, திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம். காலங்கடந்தும் ரசிக்கும்படியான நடிப்பினைக் கொடுத்து, மூன்று தலைமுறையினரை மகிழ்வித்த ஆகப்பெரும் திரைக்கலைஞர்.

பணம், புகழ், பெயர், செல்வாக்கு என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டாலும், அவற்றைத் துளியும் தலைக்கேற்றாது பணிவோடும், திறந்த மனதோடும் எல்லோரையும் அணுகும் தன் நிலை எந்நாளும் மாறாத பெருமகன்! பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.