ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகிறது. இந்நிலையில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சீமான் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிடம் மற்றும் தமிழ் தேசிய சித்தாந்தங்கள் மோதுகிறது. இதில் மாற்றத்திற்கான ஒரு புரட்சி விதை ஊன்றப்படும். நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சம் தேசிய மயமாக்கப்பட்டுள்ள நிலையில் இதை ஒழிக்க ஒரு நேர்மையான ஆட்சி வந்தால் போதும். இந்த ஆட்சியில் எதுவுமே தரமானதாக இல்லை.

தாய்மார்களை ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது. அடுத்த வருடம் பொதுத்தேர்தல் வரும் போது இதனை 2000 ரூபாயாக உயர்த்தி தருவதாக கூறுவார்கள். இதன் மூலம் கடனை 10 லட்சம் கோடி ஆக்கி நம்மை கடன்காரர்களாக மாற்றி விடுவார்கள். போதையின் காரணமாகவே 90 சதவீதம் குற்றங்கள் நடைபெறுகிறது. ஒருபுறம் போதைக்கு அடிமையாகி விடாதீர்கள் என்று கூறிவிட்டு மற்றொருபுறம் மது விற்பனை பற்றி ஆய்வு செய்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வெற்றியை தமிழகத்தின் வரலாற்றை மாற்றி எழுதும். மேலும் ஜெயிக்கிற பக்கம் இருக்காமல் நிக்கிற பக்கத்தை ஜெயிக்க வையுங்கள் என்று கூறினார்.