
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் சென்னை திருவான்மியூரில் தவெக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை வருங்கால முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசிஆர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த போஸ்டருக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
சிலர் வேண்டுமென்றே தன் பெயரை பயன்படுத்தி இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியதாக அவர் கூறினார். இதேபோன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த புஸ்ஸி ஆனந்திடம் செய்தியாளர்கள் போஸ்டர் பற்றி கேட்டனர். அதற்கு அவர் நான் தமிழக வெற்றிக் கழகத்தின் சாதாரண தொண்டன் தான். சில விஷமிகள் வேண்டுமென்றே இப்படி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். தயவு செய்து இந்த போஸ்டர் விவகாரத்தை யாரும் பெரிது படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின்சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை அந்த கட்சியின் நிர்வாகிகள் மறுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.