
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருந்த போட்டோவை இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நான்தான் எடிட் செய்து கொடுத்தேன் என்று கூறினார். இது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் பல தரப்பினரும் சீமான் அதற்கான ஆதாரத்தை தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, அந்தப் புகைப்படம் 15 வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது. 15 வருடமாக சும்மா இருந்துவிட்டு இப்போது வந்து எடிட் செய்யப்பட்ட போட்டோ என்று கூறுபவர்கள் அப்போது எங்கே போனார்கள். இருவரது போட்டோவும் எப்படி எடிட் செய்யப்பட்டது அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.
பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது. லட்சிய உறவு தான். லட்சிய உறவு என்று பார்த்தால் இந்த மண்ணில் முதல் சொந்தக்காரன் அவருக்காக போராடி இறந்தவர். இப்போது அவருடைய இலட்சியத்திற்காக நிற்கிற நாங்கள் எல்லோருமே அவருடைய ரத்த உறவுகள் தான். மேலும் நான் பிரபாகரனை சந்தித்தது பற்றி யாருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறினார். நான் பிரபாகரனை 8 நிமிஷம் சந்தித்ததாக ஒருவர் கூறுகிறார். இன்னொருவர் பத்து நிமிஷம் சந்தித்ததாக கூறுகிறார். இப்போது நான் சொல்கிறேன் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. எனக்கு அவரை சந்திப்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்று கூறினார்.