நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டுமென்று வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று சீமான் வீட்டில் சம்மன் ஒட்டினர். அதாவது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்ட நிலையில் அதனை கிழித்ததோடு போலீசாரையும் மிரட்டியதால் அவருடைய வீட்டு காவலாளிகள் இருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன். எங்கேயும் ஓடி போவது கிடையாது. நான் நினைக்கும் போது தான் ஆஜராவேன். நான் வரமாட்டேன் என்று எப்போதுமே கூறவில்லை. சம்மன் நான் படிப்பதற்காகவா இல்லை எனில் நாட்டு மக்கள் படிப்பதற்காகவா.? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலையா மாட்ட  முடியும். சம்மனை கிழித்தது அவ்வளவு பெரிய குற்றமா. மேலும் சம்மனை கிழிப்பதும் கிழிக்காமல் இருப்பதும் எங்களுடைய விருப்பம் என்று கூறினார்.