மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தரக்குறைவாக விமர்சித்த காமெடியன் குணால் கம்ரா விவகாரம் அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். “கருத்து சுதந்திரத்தை சிலர் தங்களது பிறப்புரிமையாகக் கருதி நாட்டை பிளவுபடுத்தும் பேச்சுகளை தாராளமாக பேசுகிறார்கள். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அதேசமயம், ஒருவர் கருத்து சுதந்திரத்தின் பெயரில் தாக்கப்படும் நிலை ஏற்படக்கூடாது” என அவர் கூறினார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்டாண்ட் அப் காமெடியான குணால் கம்ரா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ஓட்டியவர் என பேசியதோடு, துரோகி என விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தது. இதனால் கோபமடைந்த சிவசேனா கட்சியினர் அந்த ஸ்டுடியோவை அடித்து நொறுக்கினர்.

நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டூடியோவின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டது எனக் கூறி இடித்தனர். அதில் எஞ்சிய பகுதிகள் நேற்று இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்திற்கு பிறகு குணால் எங்கே உள்ளார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் சிவசேனா தொண்டர் ஒருவர் குணால் கமராவை மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். அதற்கு கம்ரா நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். வாருங்கள் என கூறியுள்ளார். அந்த ஆடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.