திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தில் கோடீஸ்வரன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி பாட்டாலியனில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி கோடீஸ்வரனின் மனைவி அனிதா(24) பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரசவத்திற்காக வழங்கப்பட்ட தேதி கடந்து சென்றதால் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாவது பிரசவம் பார்க்கும்படி கோடீஸ்வரன் கூறியுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

கடந்த 16ஆம் தேதி இரவு அனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் நேற்று காலை மருத்துவர்கள் அனிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அனிதாவும் பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காதது தான் தாய் மற்றும் குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டி அனிதாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கோடீஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.