பாரதி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலின் மகன் ஷ்ரவின் பாரதி மிட்டல், இங்கிலாந்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு (UAE) குடிபெயர்ந்துள்ளார். காரணம், இங்கிலாந்து அரசு செல்வந்தர்களுக்கேற்ப புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால், அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், அவரது முதலீட்டு நிறுவனமான ‘அன்பவுண்ட்’-இன் புதிய கிளையை அபுதாபியில் துவங்கி, அங்கே குடியேறியுள்ளார்.

ஷ்ரவின் மிட்டல், முன்னதாக லண்டனில் பங்கு முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றியவராகவும், பின்னர் தனது தந்தையின் பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார்.

இங்கிலாந்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த அவர், இந்த வரி மாற்றத்தால் வெளியேறும் முதலீட்டாளர்களில் முக்கியமான ஒருவராக இருக்கிறார். செல்வந்தர்கள்  மற்றும் குடியுரிமை பெறாத குடியிருப்பாளர்களுக்கான வரி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் சிலர் இங்கிலாந்தை விட்டு வெளியேறுவது சமீப காலங்களாக நடந்துவருகிறது.

இங்கிலாந்தில் இதுவரை செல்வந்த குடியிருப்பாளர்கள் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், புதிய சட்டமூலம் வந்ததால்  வரிவிலக்கு நீக்கப்பட்டது. இதனால் பல செல்வந்தர்கள் — ஷ்ரவின் மிட்டல், எகிப்திய சாவிரிஸ் குடும்பம் உள்ளிட்டோர் — பிரிட்டனில் இருந்து வெளியேறி வருகின்றனர். இது, அந்நாட்டு வருவாயையும், முதலீடு செய்பவர்களையும் பாதிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.