
நாடு முழுவதும் நேற்று 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதன்படி மொத்தம் 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள ரூபாலா தொகுதியில் ஆளும் கட்சியும் மற்றும் எதிர்கட்சி இரண்டுமே வெற்றி பெறாத நிலையில் மாறாக சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். அதன்பிறகு இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் தேரா மற்றும், நலகர்க் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், ஹமீர்பூர் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது.
அதன் பிறகு மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளரும், பஞ்சாபில் உள்ள மேற்கு ஜலந்தர் பகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆளும் கட்சியான திமுக கட்சியும், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மங்களூர் மற்றும் பத்ரிநாத் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. மேலும் மேற்குவங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 10 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.