நாட்டில் போர் பதற்றம் ஏற்பட்டதாகக் கூறி, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறும் பொய்யான அறிவிப்பு ஒன்று யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில், UGC தங்கள் அதிகாரப்பூர்வ ‘X’ பக்கத்தில் விளக்கம் வெளியிட்டு, “இந்த அறிவிப்பு முற்றிலும் போலியானது, யாரும் இதனை நம்ப வேண்டாம். UGC யாருக்கும் இதுபோன்ற எந்த உத்தரவும் வெளியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் UGC இணையதளம் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் மட்டுமே வெளியாகும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

இந்த விளக்கம், இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிடிப்பில் உள்ள காஷ்மீர் (PoK) பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் துல்லிய விமானத் தாக்குதல் நடத்தியதையடுத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலியானதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையை தவறாக விளக்கிய சிலர் UGC பெயரில் போலியான தகவல்களை பரப்பி வந்ததால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. மேலும் இதனால் UGC விளக்கம் வழங்கியுள்ளதுடன், பொய்யான தகவல் பரப்புவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எச்சரித்துள்ளது.