
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கல்விக்கு நிதி விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதாவது மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிவரும் நிலையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் கண்டிப்பாக நிதியை விடுவிப்போம் என்று மத்திய அரசு கூறிவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தின் போது பேசிய துணை முதல்வர் உதயநிதி போராட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களையும் அரசையும் மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. ஒருவேளை மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நாங்கள் தமிழ் மொழியை இழக்க நேரிடும். இது திராவிடர் மண் பெரியார் மண் மற்றும் சுயமரியாதை மண் என்பதால் ஒருபோதும் எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது. 100 அல்ல நாங்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரையும் கொடுத்து தமிழைக் காக்க தயாராக இருக்கிறோம். உரிமைகளைக் காக்க உயிரை விடவும் நாங்கள் தயார்.
அதன் பிறகு அதிமுகவில் அண்ணா என்ற பெயரை வைத்துக்கொண்டு ஒதுங்கி நிற்காதீர்கள். எங்களோடு வீதிக்கு வாருங்கள். இது திமுகவுக்கான பிரச்சினை கிடையாது. மாணவர்களுக்கான போராட்டம் தமிழுக்கான போராட்டம். எனவே அதிமுகவும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயாராக இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் என்பது வெறும் தொடக்கம் தான். விரைவில் இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக தமிழ்நாடு முழுவதும் மாறும். மேலும் இந்த ஆர்ப்பாட்டம்போ மாறாமல் இருப்பது ஒன்றிய அரசின் கைகளில் தான் உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.