தமிழக அரசியலில் இன்று திருமாவளவன் அதிமுக கட்சிக்கு அழைப்பு விடுத்தது தான் பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது. அதாவது விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக கட்சிக்கு தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று அதிமுக போராட்டத்தில் கலந்து கொள்ளுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் திமுக மற்றும் விசிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்தான் அதிமுகவை திருமாவளவன் அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் திமுக அமைச்சர்கள் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எனவும் இன்னும் பல தேர்தல்களில் இந்த கூட்டணி நிலைத்து நிற்கும் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் திருமாவளவன் அதிமுகவை அழைத்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது, ஒரு நல்ல விஷயத்துக்காக தான் விசிக அழைப்பு விடுத்துள்ளது. அதனை ஏற்று அதிமுக சென்றால் நல்லது தான். அவர்கள் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்துவதில் எந்த ஒரு தவறும் கிடையாது. மது ஒழிப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசாங்கமும் செய்து கொண்டு தான் இருக்கிறது என்று கூறின்ர். முன்னதாக இந்த தொடர்பாக அமைச்சர் உதயநிதியிடம் கேட்டபோது அதிமுகவை அழைத்தது விசிகவின் விருப்பம் என்று கூறினார். மேலும் விசிக அதிமுகவை அழைத்தது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் திமுக அமைச்சர்கள் பலரும் இந்த  விஷயத்தை மிகவும் நிதானமாகவே எடுத்துக்கொண்டு பதில் கூறி வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.