
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், உயர்க்கல்வித்துறை அமைச்சர், எம்எல்ஏ ஆகிய பதவியையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இழக்கிறார். இதன் மூலம் தண்டனை காலம் 3 ஆண்டுகள், அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு என மொத்தமாக அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.
இந்நிலையில் இது குறித்து தனியார் செய்திக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு விக்கெட் தற்போது விழுந்துள்ளது. மேலும் சில விக்கெட்டுகள் விழும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். திமுக ஆட்சி ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது. எந்த கட்சியாக இருந்தாலும் குற்றம் செய்தவர் சிறை செல்ல வேண்டும் என்றார்.