
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனவிலங்குகள் மீதான குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதை அடுத்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம் இதே பகுதியில் 5 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது மேலும் 20 குரங்குகள் கொல்லப்பட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினரின் தகவலின்படி, இந்தக் குரங்குகள் விஷம் கொடுத்து மற்றொரு பகுதியில் கொல்லப்பட்டு, பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே உள்ள கேம்பனஹல்லி பகுதியில் வந்தே வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வனப்பகுதியில் உள்ள மிருகங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இது அமையக்கூடும் என வனத்துறை கூறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சில குரங்குகளை மீட்டு அவசர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதே நேரத்தில், இது யார் செயல் என்பதை கண்டறியும் வகையில் சாம்ராஜ்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அத்துடன், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். வனவிலங்குகளை விஷம் வைத்து கொல்வது, இந்திய வனத்துறை சட்டப்படி கடுமையான குற்றமாக கருதப்படுவதால், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.