டெல்லியின் பாண்டவ் நகர் பகுதியில் வெள்ளி கிழமை  இரவு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், அந்தப் பகுதியை பதற வைத்துள்ளது. நெரிசலான சந்தை சாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், ஒரு பேக்கரி கடை உரிமையாளருக்கு, சாலையை ஆக்கிரமித்ததற்கான விவகாரம் காரணமாக தகராறு ஏற்பட்டது. பின்னர், அந்த விவகாரம் வன்முறையாக மாறி, ஒரு நபர் ஹெல்மெட்டால் அவர் மீது தாக்குதல் நடத்தி, அவருடைய மாருதி விட்டாரா காரை திருடிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியின் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. வீடியோவில், தாக்குதலை நடத்திய நபர், முதலில் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் திடீரென ஹெல்மெட்டால் அவரது தலையில் பலமான தாக்குதல் செய்து, அவர் நிலை குலைந்ததும், வண்டியின் சாவியைப் பிடித்து காரை ஓட்டி அந்த இடத்தை விட்டு தப்புகிறார். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தாக்குதல் மற்றும் திருட்டில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பேக்கரி உரிமையாளருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.