மெக்சிகோவின் Zacatecas பகுதியில் நடைபெற்ற முதல் ஹாட் ஏர் பாலூன் விழாவின் போது 40 வயதான லூசியோ என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், நிலத்தில் கட்டியிருந்த ஹாட் ஏர் பாலூன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பறக்கத் தொடங்கியது.

அதே நேரத்தில் பாலூன் கூண்டில் தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த லூசியோ பலூனில் சிக்கிய இருவரை காப்பாற்ற முயன்றபோது அவர் கயிற்றில் சிக்கி, பலூனுடன் ஆகாயத்தில் இழுத்து செல்லப்பட்டார். அவர் தீக்காயம் அடைந்த நிலையில், பறக்கும் பாலூனில் தொங்கியபடி சில நிமிடங்கள் கழித்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Zacatecas மாநில அரசின் அதிகாரி ரோட்ரிகோ ரேயஸ் முக்கெர்ஸா, இந்த விபத்தை உறுதிப்படுத்தியதுடன், மாநில பொது வழக்கறிஞரின் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது என அறிவித்தார். பாலூன் பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.