
மஹாராஷ்டிராவில் உள்ள ஷீரடிக்கு சென்ற டெல்லி-ஷீரடி இண்டிகோ விமானத்தில், மதுபானம் அருந்திய நிலையில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு ஆண் பயணி மே 4-ம் தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் ஷீடியில் தரையிறங்கியவுடன், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அந்தப் பயணி கைது செய்யப்பட்டதாக தகவல். விமானத்திலுள்ள கழிவறை அருகே விமானப் பணிப்பெண் மீது தவறான நோக்கத்தில் கை வைத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விமானப் பணிப்பெண் உடனே கேபின் மேனேஜரை தொடர்பு கொண்டு தகவல் அளித்தார். பிறகு, விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்புத் துறையினரிடம் அந்த பயணியை ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், “டெல்லி–ஷீரடி விமானத்தில் ஒரு பயணி எங்கள் பணியாளர்மீது தவறான முறையில் நடந்துகொண்டார். நாங்கள் நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி பயணியை, விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய சூழல் வழங்குவதில் எங்கள் நிறுவனம் உறுதியாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.