
சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமானம் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் ஸ்பைஜெட் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 147 பயணிகள் உட்பட 155 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. விமானி சாதுரியமாக செயல்பட்டு விரைந்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் ஆபத்திலிருந்து பயணிகள் உயிர் தப்பினர். இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.