மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் சாலையின் நடுவே ஒரு இளைஞர் காளையின் மீது அமர்ந்து சவாரி செய்த வினோதமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்ரசால் சவுக் பகுதியில் சனிக்கிழமை காலை இந்தக் காட்சி பதிவானது. அந்த இளைஞர் சாலையில் நடந்து கொண்டிருந்த ஒரு காளையின் திமிலை வலுக்கட்டாயமாகப் பிடித்து அதன் மீது ஏறியதாகவும், தொடர்ந்து அதன்பின் சவாரி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பலர் அவரை கீழே இறங்குமாறு வேண்டினார். ஆனால் அந்த இளைஞர் அவர்கள் கூறியதைக் கேட்க மறுத்துவிட்டார். இதையடுத்து, முன்னாள் வார்டு கவுன்சிலராக இருந்த சுனில் வர்மா சம்பவ இடத்திற்கு சென்று சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், இளைஞர் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் பள்ளி பேருந்துகள், வாகனங்களில் சென்ற பொதுமக்கள், மாணவர்கள் போன்றோர் இந்த வினோத காட்சியை கண்டு ஆச்சரியத்தில் உறைந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த பரபரப்பான நிலைமை நீடித்தது. அந்த இளைஞர் காளையின் முதுகில்  சவாரி செய்தபடி அருகிலுள்ள மைதானம் நோக்கி சென்றார். பின்னர் போலீசார் வந்தும் தலையிட்டும் தான் இளைஞரை காளையிலிருந்து இறக்கச் செய்தனர். அதிகாரிகள் தரப்பில், “அந்த இளைஞர் மனநிலை சீரற்றவர் எனத் தெரிய வந்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகி வருகின்றது. பாதுகாப்பு பராமரிப்பு மற்றும் விலங்குகள் மீது தவறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.