கேரள மாநிலம் திருச்சூர் அருகே போதை பொருள்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி திருச்சூர் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனை நடத்தினார். அப்போது ஒரு காரில் எம்.டி.எம்.ஏ என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சுமார் 330 கிராம் இருந்த நிலையில் அதன் சந்தை மதிப்பு ரூ.3 கோடியாகும். இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஜிதேஷ்குமார் மற்றும் நஜீப்‌ ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் விக்கிஸ் கேங்க் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் தென்னிந்தியா  முழுவதும் உயர் ரக போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தெரிய வரவே கர்நாடகவை சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் விக்ரம் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் தலைமறைவான நிலையில் அவர்களை தற்போது கைது செய்துள்ளனர். இவர்கள் நட்சத்திர விடுதிகள், டிஜே பார்ட்டிகள், சினிமா சூட்டிங் நடைபெறும் இடங்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்து வந்துள்ளனர். மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.