மத்திய அரசு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்த சேவை ஆட்சியதற்காக பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 13 பேர் பத்ம விருதுகளை பெறுகிறார்கள். குறிப்பாக திரைத்துறையில் நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருதும் நடிகை சோபனாவுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பிரபல செஃப் தாமு என்கிற தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பத்மபூஷன் விருதுபெரும் நடிகர் அஜித்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது பெறுவதற்கு தேர்வாகியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள அன்பு சகோதரர் அஜித்குமாருக்கு எனது மனமார்ந்த நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மேலும் அவர் இன்னும் பல சிகரங்களை தொட்டு நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன் என்ற பதிவிட்டுள்ளார். அதோட ஜெயலலிதாவிடம் இருந்து அஜித்குமார் விருது வாங்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அஜித்தை தன் பக்கம் இழுக்க திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுவதாக கூறப்படும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா அம்மையாருடன் அஜித் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்னது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.