
தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்திற்கு உட்பட்ட தஞ்சை விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டம் தற்போது செயலாக்கத்தில் இருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலமாக பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வேளாண் விலை பொருட்களை இணையவழியில் உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயிகளின் விலைப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன் விலை பொருட்களுக்கு உரிய தொகையானது அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இது தவிர உரிமம் பெற்ற வணிகர்கள் மின்னணு பரிவர்த்தனை மூலமாக அதிக இடங்களில் நடைபெறும் மறைமுக இயலத்தில் கலந்துகொண்டு வேளாண் விலை பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது உறுதி செய்யப்படுகிறது. இதில் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 300 விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் அமைந்துள்ள கட்டமைப்பு வசதியினை பயன்படுத்திக் கொள்ளவும் தேசிய மின்னணு வேளாண் சந்தையின் மூலமாக பயனடையவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.