சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் நேற்று காலை 6.30 மணிக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. அங்கு சில நிமிடங்கள் நின்ற ரயிலில் இருந்து பயணிகள் இறங்கினர்.

அதனை தொடர்ந்து ரயில் புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருந்த நிலையில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சென்ற போது திடீரென அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து உடனே ரயிலை நிறுத்தினார். ரயில் நின்ற பிறகு ஒரு பெட்டியிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கீழே குதித்து ஓடினார். இதனைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனே அதிகாரிகள் அந்த ரயில் பெட்டிக்கு விரைந்து பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ராஜபாளையத்தில் இறங்க வேண்டிய அந்த நபர் தூங்கிக்கொண்டு இருந்ததாகவும் ரயில் நிலையத்தில் நின்று விட்டு ரயில் புறப்பட்டு சென்ற பிறகு எழுந்த அவர் இறங்க வேண்டும் என்ற அவசரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதும் தெரிய வந்தது. வாலிபரின் இந்த செயலால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.