சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெள்ளை காளி எனப்படும் காளிமுத்துவை போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு உள்ளனர் எனும் புகாரின் பேரில், அவரது சகோதரி சத்யஜோதி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில், “எனது சகோதரருக்கு மதுரையில் நடந்த கிளாமர் காளி கொலை வழக்குடன் தொடர்பு இல்லை. ஆனால் தவறாக அந்த வழக்கில் அவரை தொடர்புபடுத்தி, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் எனது சகோதரருக்கும் அந்த நிலை ஏற்படலாம் என சந்தேகம் உள்ளது. எனவே விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் தரப்பில் போலீசார் சோதனையின் பெயரில் அழைத்து சென்று என்கவுண்டர் செய்யப்படும் அபாயம் இருப்பதாக வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி, “சமீப காலமாக என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எத்தனை என்கவுண்டர்கள் நடைபெறுகின்றன என்பதை கேள்வி எழுப்பினாழும், போலீசாரே சட்டத்தை கையில் எடுத்து நடத்துவது gravely disturbing” என கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “சுட்டுப் பிடியுங்கள் என்றால் காலுக்குக் கீழ் சுட்டுப் பிடியுங்கள்; காவல்துறையினரின் பாதுகாப்புக்காகத்தான் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது, சட்டத்திற்கு மேல் அல்ல” என நீதிமன்றம் தெரிவித்தது.

அரசுத் தரப்பில், “இரு போலீசார் சமீபத்தில் ரவுடிகளால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை தேவைப்படும் என்பதையடுத்து, வழக்கை வரும் ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு, காவல்துறையின் செயல்முறை மற்றும் மனித உரிமை பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.