தமிழகத்தில் ‌ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை ‌ முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று சமீப காலமாகவே தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களிடம் கேட்கும்போது துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்கள்.‌ இதேபோன்றுதான் அமைச்சர் உதயநிதியும் கூறினார். அதோடு துணை முதல்வர் பதவி என்பதெல்லாம் வெறும் வதந்தி என்றும் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது நேற்று கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறாரா.? இது தொடர்பாக கோரிக்கை வலுத்துள்ளதே என்று கேட்டனர். அதற்கு அவர் கோரிக்கை வலுத்துள்ளதே தவிர‌ இன்னும் பழுக்கவில்லை என்றும் கூறினார். மேலும் திமுக நிர்வாகிகள் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்களே என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர் ஸ்டாலின் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.