ஸ்பெயின் நாட்டில் உள்ள பால்மா டி மல்லோர்கா விமான  நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த ரயானேர் விமானத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை, ரயானேர் போயிங் 737 விமானம் மான்செஸ்டருக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த நேரத்தில் திடீரென விமானத்தின் உள்ளே தீ எச்சரிக்கை ஒலி ஒலித்தது.

இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியதால் உடனடியாக விமான நிலையத்திலிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, அவசர கதவுகள் மூலம் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த அவசர வெளியேற்றத்தின் போது, சில பயணிகள் குழுவினர் அறிவுறுத்தல்களைக் கேட்காமல் பயத்தில் விமானத்தின் இறக்கைகளில் ஏறி அதிலிருந்து கீழே குதித்தனர். இதில் சுமார் 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்பக் கோளாறால் தீ எச்சரிக்கை ஒலித்தது மட்டுமே. எந்தவொரு தீ விபத்தும் நேரவில்லை. விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக சோதனைகளுக்குப் பிறகு விமானம் தற்காலிகமாக இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் விமானப் பயணங்களில் அவசர நிலைகளுக்கு தயாராக இருக்க வேண்டியதையும், பயணிகள் அமைதியாக இருந்தே பாதுகாப்பாக செயல்பட வேண்டியதையும் நினைவூட்டுகிறது.