
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வப்போது பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கிடையே தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லை வழியாக 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இடையே பயங்கர துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்ற நிலையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சியின் தலைவராக பருக் அப்துல்லா இருக்கிறார்.
இந்த கட்சி காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி அமைத்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் உமர் அப்துல்லா முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த கட்சியின் தலைவர் பருக் அப்துல்லாவிடம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்டது. தீவிரவாதிகள் வந்து கொண்டிருக்கும் வரை தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வேண்டும். இங்கு செல்வம் குறைவாக இருப்பதால் கடவுளும் லட்சுமி தேவியும் இங்குள்ள மக்களுக்கு செல்வத்துடன் அருள் பாலிக்கட்டும். இன்று பெரும்பாலான கடைகள் காலியாக காட்சியளிக்கிறது என்றார். மேலும் தீவிரவாதிகள் தொடர்ந்து நுழையும் வரை அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவார்கள் என்று பருக் அப்துல்லா கூறியுள்ளார்.