புதுச்சேரியில் தீபாவளிக்கு புதிய உடைகள் வாங்கி தரக் கோரிய மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக, தனியார் நிறுவன ஊழியர் நரசிம்மன் (26) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நரசிம்மன் மற்றும் நிவேதிதா இருவரும் காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர், இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவமாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மனைவி நிவேதிதா புத்தாடை மற்றும் தேவையான பொருட்களை வாங்கி தருமாறு கேட்டபோது, நரசிம்மன் ஆன்லைனில் தள்ளுபடி வந்தால் வாங்கி தருவேன் என்று கூறியுள்ளார்.  ஆனால் அவருடைய மனைவி எப்போதுமே ஆன்லைனில் மட்டும்தான் ஷாப்பிங் செய்த பொருள்கள் வாங்கி தருவீர்களா. நேரில் சென்று பொருள்கள் வாங்கி தர மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பி சண்டை போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தகராறாக மாறி, நிவேதிதா கோபத்தில் வேறு அறைக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனம் உடைந்த நரசிம்மன், வீட்டில் உள்ள மின்விசிறியில் போர்வை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை கண்ட குடும்பத்தினர் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கோரிமேடு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.