பெங்களூரு புறநகர் ஆனேகல் தாலுகா பன்னரகட்டா சாலை ஜனதா காலணியை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில் இவருடன் லக்கம்மா என்ற பெண்ணும் வசித்து வந்தார். இவர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் காதல் ஜோடியான இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவர்களது வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் அழுகிய நிலையில் பிரபுவும் லக்கமாவும் பிணமாக கிடந்துள்ளனர். அவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்த நிலையில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது திருமணம் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தது தெரியவந்தது. ஆனால் அவர்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்கள் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.