உத்தரப்பிரதேச மாநிலம் அசம்‌கட் மாவட்டம் கந்தராபூர் பகுதியில் உள்ள கிராமத்தில் மந்திரவாத சடங்கின் போது 35 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி 10 ஆண்டுகளான நிலையில்  குழந்தை இல்லாததால் ஆனுராதா என்ற பெண் தாயுடன் சேர்ந்து அந்த பகுதியில் பிரபலமாக செயல்பட்டு வந்த தந்திரவாதி சந்து என்பவரை சந்தித்துள்ளார்.

மந்திர சடங்கின்போது ஆனுராதா மீது பேய் இருப்பதாக என கூறிய சந்து மற்றும் அவரது கூட்டாளிகள், அவளது தலைமுடியை இழுத்து, கழுத்தையும் வாயையும் கடுமையாக அழுத்தி தாக்கியுள்ளனர். மேலும் கழிவுநீர் மற்றும் கழிப்பறை நீரைப் பலவந்தமாக அருந்த வைத்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அவரது தாயார் இது தவறாக இருப்பதாக எதிர்த்தும், அந்தக் குழு கவனிக்காமல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

அனுராதாவின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து சந்து மற்றும் அவரது கூட்டாளிகள் அவளைக் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இரவு 9 மணியளவில் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். உடனடியாக சந்துவும் அவரது குழுவும் மருத்துவமனையை விட்டு தப்பியோடியுள்ளனர். உடலை கிராமத்திற்கு கொண்டுவந்த குடும்பத்தினர் நீதிகேட்டு போராட்டம் நடத்தினர்.

அனுராதாவின் தந்தை பாலிராம் யாதவ், சந்து ₹1 லட்சம் ஒப்பந்தம் செய்து, அதில் ₹22,000 முன்பணம் பெற்றதாகவும், அவரது மகளை சடங்கின் பெயரில் கொலை செய்ததாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணையை துவங்கியுள்ளனர். சந்து பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஆனால் அவரது மனைவி மற்றும் மற்றைய 3 உதவியாளர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நகர காவல் கண்காணிப்பாளர் மதுபன் குமார் சிங் கூறுகையில், “சந்து மற்றும் அவரது மனைவி மற்றும் இருவர் ஆகியோர் ஆனுராதாவை தந்திர சடங்கு பெயரில் கழுத்தை அழுத்தி கொன்றுள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார். சந்து தனது வீட்டில் போலி ஆன்மிக சூழலை உருவாக்கி, சிறிய கோயில்கள், மணி, சிலைகள் உள்ளிட்டவற்றை வைத்து பொதுமக்களை ஈர்த்து, ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.