ஜம்மு & காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைஸ்ரான் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாதிகள் இராணுவத்தினர் போல் யூனிபார்ம் அணிந்து வந்தனர் என்றும், துப்பாக்கியுடன் சுற்றுலா பயணிகளை குறி வைத்து சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின் இணையத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், உயிரிழந்த ஒருவரின் மனைவி கதறிக் கொண்டே, “நான் பக்கத்தில் பேல் பூரி சாப்பிட்டு இருந்தேன், என் கணவர் பக்கத்தில் இருந்தார்.

ஒருவன் வந்து அவரை துப்பாக்கியால் சுட்டான் என்று கூறும் காட்சி மக்கள் மனங்களை உருக்கும் வகையில் உள்ளது.

மேலும் மற்றொரு பெண் வீடியோவில், “என் மாமனாரை காப்பாத்துங்க” எனக் கண்கலங்கிக் கூச்சலிடுகிறார். மற்றொரு காட்சியில், ரத்தம் வடிந்த கையோடு உட்கார்ந்துள்ள ஒரு நபரின் மனைவி, உதவிக்காக வீடியோ எடுக்கிற நபரிடம் அழும் காட்சி மனதை கலங்கடிக்கிறது. இந்த தம்பதியர் ஹனிமூனுக்காக காஷ்மீருக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படைகள் மற்றும் மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசி மூலம் பேசி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் அதிர்ச்சியான ஒன்றாகும்.